தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2019, 11:14 PM IST

ETV Bharat / state

பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய,மாநில அரசுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

state-and-central-govt-ask-permission-from-hc-to-put-banner-for-modi-xi-jinping-meeting

இந்தியா - சீனா இடையிலான நட்புறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவிருக்கின்றனர். இந்த சந்திப்பு வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது.

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும்கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி, மத்திய வெளியுறவுத்துறை, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சார்பில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.

இந்த முறையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 3ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பிரதமர் வருகையால் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம்!

ABOUT THE AUTHOR

...view details