தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் கிராமப் பகுதிகளில் நடக்கவேண்டிய பல்வேறு கட்ட பணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்தல் வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்ப்பு, திருத்துதல், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கான இணையதள அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. மேலும், மூன்று வருடத்திற்கு மேலும் சொந்த ஊர், அல்லது பிற மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து உறுப்பினர்கள் பதவி ஏற்ற பிறகு, நிலைக் குழுக்கள் மற்றும் சட்டப்பூர்வ குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும்.