சென்னை:தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக முன் விரோதம் காரணமாக ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில் கே.கே நகரில் முன் விரோதம் காரணமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம், மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவக்குமாரின் உதவியாளரின் கொலை என தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது.
இதனைத் தடுக்கும் பொருட்டாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து எஸ்.பிக்கள், காவல் ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது ஸ்டாமிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் கடந்த ஐந்து வருடங்களில் கொலை குற்றவாளிகளின் வீட்டினை கண்காணித்து அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளில் கொலை குற்றங்களில் சிக்கிய ரவுடிகளின் வீடு, பிணையில் வெளியே வந்த ரவுடிகளின் வீடு உள்ளிட்ட இடங்களில் திடீரென அந்தந்த மாவட்ட எஸ்.பி, துணை ஆணையர் தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டு அவர்கள் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் அதிகப்படியான கொலை சம்பவங்கள் நடக்கக்கூடிய புளியந்தோப்பு காவல் மாவட்டம் மற்றும் மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் துணை ஆணையர் தலைமையிலான காவலர்கள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 25 கத்திகள், போதைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.