இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட், லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப் 8) கடிதம் எழுதியுள்ளார்.
தீப்பெட்டி உற்பத்தித் தொழில், தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஒரு பாரம்பரியத் தொழிலாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும் அப்பணியாளர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயம் செய்ய இயலாத வறண்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரமாக இத்தொழில் விளங்குவதாகவும், தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் சுமார் ரூ.400 கோடி அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்படுகிறது என்பதை மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அவர்களுக்கு இக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தொழில் துறை மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், ஏற்றுமதி சந்தையில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோவிட் பெருந்தொற்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட விநியோக சங்கிலி இடையூறுகள், ஏற்றுமதி தொடர்புடைய செலவீனம் மற்றும் நடைமுறை சிரமங்கள் மேலும் அதிகரித்துள்ளதாகவும், உள்ளீட்டு செலவுகளும் பெருமளவு அதிகரித்துள்ளதையும் தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.