சென்னை:பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், "மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை" உறுதி செய்துள்ளது. அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.
ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை. இதன் காரணமாகவும், மேலும் பல காரணிகளுடன், அரசியலமைப்பின் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுகிறது.
தனது, 31.8.2018 நாளிட்ட அறிக்கையினை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல. அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தனிநபர் சட்டங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரே மாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுகிறேன்.
கலாச்சார மற்றும் மதப் பன்முகத்துவம்:வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா என்றும், பொது சிவில் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிவகுக்கும் என கவலை தெரிவித்துள்ளார். பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம். ஒவ்வொரு மதக் குழுவுக்கும், அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் பிரிவு 25-ன் கீழ் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சுதந்திரத்தை பொது சிவில் சட்டம் மீறுகிறது. பிரிவு 29, பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமையை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டம் போன்ற ஒரு சட்டத்தைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியும், மத விவகாரங்களில் அரசின் அத்துமீறலாக கருதப்படும். இது எதிர்காலத்தில் தனிமனித சுதந்திரங்கள் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு கவலைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கிடும்.
கூட்டாட்சி அமைப்பு:இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மாநிலங்களுக்கு தன்னாட்சியை வழங்குகிறது மற்றும் அவற்றின் தனித்துவமான சமூக-கலாச்சார அடையாளங்களை மதிக்கிறது. தனிநபர் சட்டங்களை மையப்படுத்துவதன் மூலமும், மாநிலங்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதற்கான உரிமைகளை அழிப்பதன் மூலமும், பொது சிவில் சட்டம் இந்தக் கோட்பாட்டை மீறுவதாக உள்ளது. மாநிலங்களின் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் ஒப்புதல் இல்லாமல் தனிநபர் சட்டங்களில் எந்தவொரு சீர்திருத்தமும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்தும். தனிநபர் சட்டங்களில் உள்ள சீரான தன்மை ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக ஒருங்கிணைப்பு:பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், பலவகையான மத, பண்பாட்டு, மொழி வேறுபாடுகள் உள்ள நமது நாட்டில், மத நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது. முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடிய ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம்.