இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்த கல்வி ஆண்டே 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று எழுத்துப்பூர்வமாக மத்திய பாஜக அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், அதிமுக அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இது இடஒதுக்கீடு கிடைத்து விடும் என்று எண்ணிய மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பாஜக அரசும் அதிமுக அரசும் கைகோர்த்து திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாநில அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. பட்டியலின மாணவர்களுக்கு மூன்று விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் அளிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மாணவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு பொறுப்பற்ற முறையில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் செயல்பட்டு, சட்டபூர்வமான உரிமையைத் தட்டிப் பறித்துள்ளன. இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கூறும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் மூலமும், சத்தியப்பிரமாண வாக்குமூலமாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தது இந்திய சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளி.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 21 நாளில் இடஒதுக்கீடு அளித்து, அதைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, பல நூறாண்டுக் காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உரிமைகளில் எல்லாம் தாராளமாக ஆக்கிரமிப்பு நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மன்னிக்க முடியாத சமூக அநீதியைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு எவ்வித தயக்கமும் இன்றி செய்து வருகிறது. இதை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் நீண்ட நாள்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்தச் சமூக அநீதிக்கு மனமுவந்து துணை போகும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து விட்டு, அதற்காக அமைக்கப்பட்ட நால்வர் கமிட்டிக் கூட்டத்தில் வாய் திறக்காமல் அமைதி காத்து இரட்டை வேடம் போட்டது. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை கேட்கப்பட்டும் அதைக் கடைசி வரை கொடுக்காமல் இழுத்தடித்தது.
திமுக ஏற்கனவே வலியுறுத்தியது போல் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்களில் இந்த ஆண்டே 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும், பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டத்திற்காகக் காத்திராமல் ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சட்ட உரிமையாக உள்ள 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி, பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல், சமூகநீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல் மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "7.5% இட ஒதுக்கீடு தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்கிறார் ஆளுநர் " - மு.க.ஸ்டாலின்