தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எதிர்க்கட்சிகளைப் பேசவிடுங்கள்' - அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின் - முதலமைச்சர் ஸ்டாலின்

பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஸ்டாலினின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Aug 25, 2021, 11:54 AM IST

கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 24) ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பே அமைச்சர்களுக்கும், பேரவை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவு போட்டிருந்தார். "சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, நீங்கள் (திமுக உறுப்பினர்கள்) யாரும் கூச்சல் குழப்பம் செய்யக்கூடாது.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்குத் தெளிவான பதில் கொடுக்க வேண்டும்" என்பதுதான் அந்த உத்தரவு.

ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர்கள் உள்பட எட்டு எம்எல்ஏக்கள் பேசினார்கள். அதில் அதிமுக கொறடாவும், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சருமான வேலுமணி பேசும்போது,

“எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. அம்மா உணவகங்கள் தொடர வேண்டும், கோவையில் பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன” என்றார். அப்போது, அமைச்சர் நேரு குறுக்கிட்டுப் பேசத் தொடங்கியதும், அவரை அமருமாறு சைகை காட்டினார் ஸ்டாலின்.

உடனே நேருவும் முடிவில், சரியான பதில் தருகிறேன் என்று கூறி அமர்ந்துவிட்டார். சிறிது நேரத்தில் மைக்கைப் பிடித்த ஸ்டாலின், 'எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேச வேண்டாம். அவர்களை முழுமையாகப் பேசவிடுங்கள். கடைசியாக விளக்கம் சொல்லுங்கள்' என்றார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளிப்படையாகப் பேசியதை அதிமுக மட்டும் அல்ல; பாஜக உறுப்பினர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோடநாடு கொலையை விசாரிக்க தடைகோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details