தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'4 தொகுதி இடைத்தேர்தல் களத்தில் வெற்றிக்காக முழுவீச்சுடன் பணியாற்றுங்கள்..!' - ஸ்டாலின்

சென்னை: ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி முத்திரை பதிப்பதற்கு முழுவீச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின்

By

Published : May 12, 2019, 4:56 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் எந்த சூழ்ச்சி தந்திரங்கள் செய்தாலும், அது மக்கள் மன்றத்தில் எடுபடாது. தனது ஐந்து ஆண்டு சாதனைகளை கூற முடியாமல், நேரு, ராஜீவ்காந்தி ஆகியோர் மீது பொய் பரப்புரை செய்து வருகிறார் மோடி. இந்த பரப்புரை தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்பதால்தான், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடங்கி, பேரவைத் தலைவரின் அக்கிரம நோட்டீஸ் வரை ஜனநாயக விரோத செயல்பாடுகளின் அராஜகமான உச்சகட்டத்திற்குத் திட்டமிடுகிறது. அதனை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவிற்கும், கூட்டணி கட்சிகளுக்கும் இருக்கிறது.

அதேபோன்று, மே 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே அதிமுக உதறலில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க அமைச்சர்கள் பட்டாளமே குவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் எனக்கூறி தங்களுடைய கடமையில் இருந்து தப்பிக்கும் இந்தக் கூட்டம்தான், தேர்தல் ஆணையத்தை தனது முறைகேடுகளுக்கு உடந்தையாக்கிக் கொள்ளப் பார்க்கிறது.

இவை அனைத்தையும் விழிப்புடன் கவனித்து, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளிலும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள் கண்ணிமைக்காமல் கடமையாற்ற வேண்டிய நேரம் இது. தோழமைக் கட்சியினரின் துணையுடன் வாக்கு சேகரிப்பு பணிகள் வீதி வீதியாக, வீடு வீடாக, ஒவ்வொரு வாக்காளராக நடைபெற வேண்டும். வாக்குப்பதிவு நாளிலும் அதிக கவனம் வேண்டும். மக்களின் பேராதரவால் ஏற்கனவே தமிழகம் - புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நமது வெற்றியை, முழுமையானதாக்க 100 விழுக்காடு வெற்றியாக மாற்றிட 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் இடைவிடாமல் முழுவீச்சுடன் பணியாற்றிட வேண்டும்.

இது 4 தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், உடன்பிறப்புகளுக்கு மட்டுமான வேண்டுகோள் அல்ல. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மற்ற தொகுதிகளில் உள்ள உடன்பிறப்புகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி 4 தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பரப்புரையை மேற்கொள்ள முடியும். ஜனநாயக முறையில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும். ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23க்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம், என்று ஸ்டாலின், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details