சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் 68ஆவது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களிடமிருந்து வாழ்த்து பெற்றுவருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசி மூலம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், முன்னாள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்," மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டிற்கான பணிகளை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்துவருகிறார். இரண்டு மாதங்களில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது.
தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ள ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுகவின் மாநாட்டில் தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்கான தொலைநோக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும். ஊழலில் திளைத்துள்ள ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது கைகளை பிரதமர் மோடி உயர்த்தியதிலேயே ஊழல் செய்வது யாரென்று தெரிகிறது. மோடி, அமித்ஷா மட்டுமல்ல பாஜகவிலிருந்து யார் வந்தாலும் கவலைப்படமாட்டோம்" எனக் கூறினார்.