தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ஸ்மார் சிட்டி உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை கவனித்து வந்த தலைமை பொறியாளர் நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு சென்னை மாநகராட்சியில் தர நிர்ணய தலைமை பொறியாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஓய்வு பெற்று இரு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட புகழேந்தி என்பவர் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் உள்ள தலைமை பொறியாளர் பதவிக்கு சென்னை மாநாகராட்சி பொறியாளரை நியமிக்கக் கூடாது என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளபோதும் விதியை மீறி புகழேந்தியை அந்தப் பதவியில் அமர்த்தியது ஏன்?
புகழேந்திக்கு ஏற்கனவே இரு முறை தலா இரண்டு ஆண்டுகள் என நான்கு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 5ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட திட்டப் பணிகளை அவர் கவனித்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதி அந்தப் பணி நீட்டிப்பை உள்ளாட்சித் துறை அமைச்சர் வழங்கினார்.
17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த டிரான்ஸ்பர் ஊழலில் தனக்குத் தானே பாதுகாப்பு கவசம் அமைத்துக்கொள்ளும் வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்நோக்கத்துடன் இதனைச் செய்துள்ளார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக திரும்பத் திரும்ப பணி நீட்டிப்பு வழங்கி ஒரு தலைமை பொறியாளரை குறிப்பாக புகழேந்தியையே நியமித்துக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன?
தமிழ்நாடு முழுவதும் நகராட்சிகள், மாநகராட்சிகளின் டெண்டர் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி அங்கு தர நிர்ணய தலைமை பொறியாளர் பதவியில் டம்மியாக அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன? 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும் முறைப்படி நடக்கிறதா அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா?
எந்த விசாரணைக்கும் தயார் என அடிக்கடி பேட்டியில் தெரிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 17 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள், நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, பணி நியமனங்கள் ஆகியவை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதலமைச்சர் பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயங்கினால், மத்திய அரசு இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முதலமைச்சரை விமர்சிக்க ஆ. ராசாவுக்கு தகுதி இல்லை - அமைச்சர் உதயகுமார்