தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2020, 9:58 PM IST

ETV Bharat / state

‘இன்று உள்ளாட்சி... விரைவில் நல்லாட்சி!’ - ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சியில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழ்நாட்டில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

stalin
ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்களின் நம்பிக்கைக்குரிய பேரியக்கம் எந்நாளும் திமுக என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார போதையில், வெற்றி பெற்றுவிடலாம் என பகல் கனவு கண்டுக்கொண்டிருந்த ஆளுந்தரப்புக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய 13 மாவட்டங்கள் பலவற்றிலும் திமுக கூட்டணியின் வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளுடன், அநீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளிலும் நீதிமன்றத்தின் வாயிலாக நியாயம் கிடைக்குமென்றால், சேலம், கரூர் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களிலும் ஒன்றியங்களிலும் திமுக கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

சேலத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளரான 22 வயது பட்டதாரி பெண் பிரீத்தி மோகன், திருச்செங்கோடு ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட ரியா என்ற திருநங்கை, திருப்பூர் மாவட்டத்தில் 82 வயது மூதாட்டியும், மேலூரில் 79 வயது மூதாட்டியும், தோவாளையில் 73 வயது மூதாட்டியும், கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவியும், போன்ற மக்கள் பிரதிநிதிகளான எளிய மக்களுக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளாட்சியில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழ்நாட்டில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம். இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட-ஒன்றிய நிர்வாகிகள், அவர்களுக்குத் துணையாக இருந்த கழக அமைப்புகளின் நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான கழகத்தின் தொண்டர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

தோல்வி கண்டால் துவள்வதுமில்லை, வெற்றி கண்டால் வெறிகொள்வதுமில்லை என்பதுதான் தலைவர் கலைஞர் நமக்கு கற்றுக் கொடுத்துள்ள அடிப்படை அரசியல் இலக்கணம். அந்த வகையில், இந்த வெற்றி நாம் மேலும் அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் தொண்டாற்றவும், கட்சிப் பணியாற்றவும் பயன்பட வேண்டுமே தவிர, ஆரவாரங்களுக்கும் கோலாகலங்களுக்கும் உரியதல்ல.

ஜனவரி 11ஆம் தேதியன்று மாவட்ட கவுன்சில் தலைவர்-ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாக்களித்து தமக்கான தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் இது. எந்தக் கட்டத்திலும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், சூதுமதியாளர்களை வீழ்த்தி, மக்கள் தீர்ப்பை மாண்புறச் செய்வோம். அடுத்தடுத்த களங்களுக்கு இப்போதிருந்தே ஆயத்தமாவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 70 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை மாற்றிய ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details