தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உள்ளாட்சி ஜனநாயகத்தை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்கிறது' - தேர்தல் ஆணையம் மீது ஸ்டாலின் சாடல்! - admk-election commission alliance

சென்னை: "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்பது, ஜனநாயகத்தை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யும் சட்ட விரோத செயல்" என்று, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

ஸ்டாலின்

By

Published : Apr 22, 2019, 6:35 PM IST

Updated : Apr 22, 2019, 7:19 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதற்கு மேலும் மூன்று மாதங்கள் காலஅவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மே மாதத்திற்குள் தேர்தலை நடத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அந்தக் கெடு முடியும் வரை அமைதியாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் அதிமுக அரசின் ஊதுகுழலாக மாறியுள்ள மாநில தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டிருப்பது உள்ளாட்சி ஜனநாயகத்தை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யும் சட்டவிரோத செயலாகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை. இதனால் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே குப்பைமேடுகள் போல் குவிந்து நிற்கின்றன. கிராம நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து விட்டது. தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகின்ற இந்த நேரத்தில் மக்கள் தங்களின் தாகம் தீர்ப்பதற்கு, உள்ளாட்சி நிர்வாகமோ, உள்ளாட்சி பிரதிநிதிகளோ இல்லாமல் தவிக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை 31.12.2016-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முதன் முதலில் அளித்த தீர்ப்பின் மீது எண்ணற்ற முறை காலஅவகாசம் பெற்றது இந்த அதிமுக ஆட்சி. மாநில தேர்தல் ஆணையரே நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகி நீதிமன்றத்திடம் இந்த அரசும், ஆணையமும் சேர்ந்து பலமான குட்டுக்களை பலமுறை வாங்கிக் கொண்ட பிறகும், நாங்கள் திருந்தவே மாட்டோம் என்று திரைமறைவில் அல்ல. வெளிப்படையாகவே கூட்டணி அமைத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றன.

தி.மு.க. வழக்குப் போட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்ற ஒரு பொய்ப் பரப்புரையை மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் இப்போது உயர்நீதிமன்றத்திலும் கால அவகாசம் பெற்று வருகிறார். உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து காரணம் தேடுவதை அவரும், அவரது உள்ளாட்சித் துறை அமைச்சரும் இன்றுவரை நிறுத்திக் கொள்ளவில்லை. தேர்தல் வைத்தால் தோல்வியும் சேர்ந்தே வரும் என்ற அச்சமே அவர்களை உள்ளாட்சித் தேர்தல் நடத்த விடாமல் தடுக்கிறது. எட்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி முதல் மாநகராட்சி வரை நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் அணி வகுத்து நிற்கின்றன.

நிர்வாக சீரழிவுகள் துர்நாற்றம் அடிக்கிறது. இவற்றை எல்லாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும். அதிமுக அரசுக்கு படுதோல்வியைப் பரிசாகக் கொடுப்போம் என்று காத்திருக்கிறார்கள். தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி நிச்சயமாக மக்கள் நலனில்அக்கறை இல்லாத உதவாக்கரை ஆட்சி என்று நான் பிரச்சாரம் செய்தது சரிதானே என்று மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

கிராம ராஜ்யத்தின் உயிர் மூச்சான உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏறக்குறைய 30 மாதங்களாக தேர்தல் நடத்தாமல் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாய்தா வாங்கிக்கொண்டு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை நாசமாக்கும் அதிமுக ஆட்சியை மக்கள் எப்போது தேர்தல் வந்தாலும் மன்னிக்க மாட்டார்கள்; தக்க பாடம் புகட்ட தயாராகவே இருக்கிறார்கள். ஆகவே ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக ஆட்சியும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாகக் கைவிட்டு, மக்களின் குறைகள் தீர்க்கும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான உள்ளாட்சித் தேர்தல்களை இனியும் காலதாமதமின்றி நடத்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 22, 2019, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details