சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக துரைசாமி இருந்துவரும் நிலையில், அவரது பதவிக்காலம் மே 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதன்படி, குழுவிற்கு தலைவராக டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ஜெகதீஷ் குமாரை தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்தார். இது தமிழ்நாடு அரசியல் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
- புகழ்பெற்ற, பழம்பெரும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக, ஜேஎன்யூ துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை, தமிழ்நாடு ஆளுநர் நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- அந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டுகொள்ளாமல், அலட்சியமாக இருக்கும் ஜெகதீஷ் குமாருக்கு பரிசு வழங்குவதுபோல், தன்னுடைய வேந்தர் பதவியைப் பயன்படுத்தி தேடுதல் குழுத் தலைவராக நியமித்திருப்பது மோசமான முன்னுதாரணம்.
- துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு, பாஜகவின் காவிமயக் கொள்கையை உயர் கல்வியில் புகுத்துவதற்கு, ஒரு ஆளுநரே சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது வருத்தமளிக்கிறது.
- கல்வி வல்லுநர்கள் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில், ஒரு துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுத் தலைவருக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்ற பொய்த்தோற்றத்தை ஆளுநர் உருவாக்குகிறார்.
- தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் இதுபோன்ற செயலைக் கைவிட்டு ஆளுநர் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்வியாளர் ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஜேஎன்யூ துணைவேந்தர் தேடுதல் குழுத் தலைவரா? - பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு