திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பத்தாம் வகுப்பிற்கு மேல் உயர்கல்வி பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மத்திய அரசின் “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” திட்டத்தில் 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் 800 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளன என்று சி.ஏ.ஜி அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான இந்த “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்ற நியாயமான கேள்வியை எழும்பியுள்ளது.
உயர் கல்வி பெற வேண்டிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையைக் கூட நிறுத்தி வைத்திருப்பது தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” என்று ஊழலின் மொத்த உருவமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி இது என்பதை அ.தி.மு.க அரசு உணர வேண்டும். ஆகவே, ஆதிதிராவிடர் நலத்துறை வங்கிக் கணக்கில், கல்வி உதவித் தொகையின் நிதி முடக்கி வைக்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அளித்திட வேண்டும்.
"போஸ்ட் மெட்ரிக் கல்வி" உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை காலதாமதமின்றி குறித்த காலத்திற்குள் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து உடனுக்குடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
800 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும், முறைகேடுகளைச் செய்த கல்வி நிறுவனங்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து உண்மையான பயனாளிகளுக்கு இந்த கல்வி உதவித் தொகை போய் சேருவதை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இழைத்த அநீதி குறித்து அதிமுக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.