ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 கல்வியாண்டிலிருந்து பொதுத் தேர்வு நடைபெறும்” என்று அவசர ஆணை பிறப்பித்திருக்கும் அதிமுக அரசுக்கு, தி.மு.கழகத்தின் சார்பில், கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி கற்பதற்கு பள்ளிக்குள் நுழைவதிலிருந்து - தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை, விதவிதமான பொதுத்தேர்வுகள் மூலம் மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் இந்த உத்தரவு உருவாக்கும் என்ற அடிப்படை உண்மையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் திரு. செங்கோட்டையன் உணராதது கவலையளிக்கிறது.
அதிமுக அரசு அறிவித்துள்ள இந்தப் பொதுத் தேர்வு 'இனிமேல் ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை' என்ற தாழ்நிலையை உருவாக்கி - ஆரம்பக் கல்வியையும் வணிகமயமாக்கி விடும் பேராபத்தைத் தோற்றுவித்து - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியறிவையும் எட்டாக் கனியாக்கி விடும்!
'கல்விச் சீர்திருத்தம்' என்ற பெயரில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்து, அதன் மூலம் அவர்களை 'பெயில்' ஆக்கி - ஆரம்பக் கல்வி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழ்நிலையையும், அவர்கள் படிப்பதையே வெறுத்து அந்தக் கல்வியை விட்டு விலகி, குலக் கல்விக்குத் திருப்பி அனுப்பும் தந்திரத்தையும் மத்திய - மாநில அரசுகள் கூட்டாகக் கடைப்பிடிக்கின்றன. இது அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். சமூக நீதியின் வேரில் வெந்நீர் ஊற்றி, சமுதாய முன்னேற்றத்தை ஒரு நூறாண்டு பின்னோக்கி இழுத்துச் செல்லும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.
ஆகவே, 'மாநிலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றிச் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு' என்ற 13.9.2019 தேதியிட்ட அரசு ஆணையை அதிமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
'சீர்திருத்தம்' என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வி கனவில் சீர்கேடு உண்டாக்கிச் சிதறடிக்கும் எந்த முடிவினையும் பெற்றோர், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்காமல் - அவசரக் கோலத்தில் எடுத்து மாணவர் சமுதாயத்தின் மீது திணித்திட வேண்டாம், அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிட வேண்டாம் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.