தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சி.ஏ.ஏ.வை எதிர்த்தால் அதிமுக சிறைக்குச் செல்ல வேண்டும்' - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மத்திய அரசின் கைகளில் உள்ளது, அவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Feb 2, 2020, 1:54 PM IST

இந்தியா குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்த கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கி வருகின்ற 8ஆம் தேதிவரை நடைபெறும். மேலும் இது எதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாத வகையில் உள்ளது.

மேலும் கார்ப்ரேட் கம்பெனி வருமான கணக்கை காட்டுவதைப் போல, நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். வேலைவாய்ப்பு உருவாக்கவும், பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்யவும் எந்தத் திட்டமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. இதுபோன்றவைகளில் இருந்து திசை திருப்பவே குடியுரிமை என்னும் கொடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பல கட்சிகள் நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்த நிலையில் அதிமுக, பாமக கட்சி வாக்கு அளித்ததால் தான் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது நாட்டில் நடந்துவரும் ஆர்ப்பாட்டம், கலவரங்களுக்கு அதிமுக, பாமக கட்சிகளே காரணம் என்பதை நான் அழுத்தமாகப் பதிவுசெய்கிறேன்.

நம் சட்டப்பேரவையில் திமுக எவ்வளவு வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. காரணம் அவர்கள் நிறைவேற்றினால் ஆட்சி சிறைக்குச் சென்றுவிடும். அந்தளவு அவர்களின் ஊழல்கள் மத்திய அரசின் கைகளில் உள்ளது. தான் சிறைக்குப் போகக்கூடாது என்பதால்தான், அதிமுக அரசு இந்த கொடுமையான சட்டத்தை ஆதரித்து வருகின்றது.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக கூட்டணி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம் என பலவகையில் நம் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றோம். இந்நிலையில் இன்று மக்களோடு மக்களாக கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். இதை குடியரசுத் தலைவரிடம் கொடுத்து நம் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'1911ஆண்டு 5ஆவது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது' - உளறிய ஓ.பி.எஸ்!

ABOUT THE AUTHOR

...view details