இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவிப் பொதுமக்களுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றமாகியுள்ளது.
முந்தைய மாதக் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியானபோதே, அடுத்து வருகின்ற மாதக் கணக்கெடுப்பில் இந்த பி.எம்.சி கட்டணம் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால் இப்போது மின் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட முறையில் உத்தரவாதம் தரப்பட்டபடி மின்கட்டணம் வசூல் செய்யாமல், குறிப்பாக யூனிட்டை கழிக்காமல் வெவ்வேறான வீதப்பட்டியல் (Tariff Slab) அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பு மின் நுகர்வோர்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பதற்றத்தினால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் பிரசன்னா இதுகுறித்துக் கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக நியாயமான பதிலளிப்பதற்குப் பதில், பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரசியல் ரீதியான அறிக்கையை ஒரு விளக்கமாகக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்காமல், கட்டணம் வசூலிப்பதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்பது நன்கு தெரிந்திருந்தும், தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்பது போல், மின் பகிர்மானக் கழகம் விந்தையான விளக்கமளிப்பதும், அதை அதிமுக அரசு ஆமோதித்து கரோனா காலத்தில் மக்களிடம் மங்காத்தா சூதாட்டம் போல், மின்கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதும் பொறுத்துக்கொள்ள முடியாததாகும்.
கரோனா காலத்தில் ஜவுளி, பொறியியல் பொருள்கள், தானியங்கி, மின் பொருள்கள், தோல் பொருள்கள், ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தயாரிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடிக் கிடந்தன. தொழிலே இல்லாத போது எப்படி அவர்கள் எல்லாம் மின் கட்டணம் செலுத்துவார்கள், வேண்டுமென்றே உருவாக்கி இருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
'மங்காத்தா சூதாட்டம்' போடும் அதிமுக அரசு - ஸ்டாலின் காட்டம்! - Chennai District News
சென்னை: கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து அதிமுக அரசு “மங்காத்தா சூதாட்டம்” போடுவது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசின் மாங்காத்தா சூதாட்டம்