தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - ஸ்டாலின் சவால் - கரோனா

அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும், இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் பழனிசாமி தயாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

dmk_stalin_
dmk_stalin_

By

Published : Oct 10, 2020, 7:07 PM IST

சென்னை:திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6.46 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அதிமுக ஆட்சியில், மாநிலத்தின் கடன் 4.56 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி, இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் 10-ஆக இருந்த “கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்” நோய்த் தொற்றுப் பரவலின் தீவிரத்தால், இன்றைக்கு 70 ஆக உயர்ந்துவிட்டது.

இத்தனை தோல்விகளையும் அரங்கேற்றிவிட்டு, கரோனா தொற்றில் தமிழ்நாட்டை உச்சக்கட்டத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, கட்சியினரைச் சந்திக்க மாவட்டங்களுக்குச் செல்கிறார். அமைச்சர்கள் ஊர் ஊராக உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள்.

தனது கரோனா நிர்வாகத் தோல்வியைத் திசை திருப்ப, முதலமைச்சர் பழனிசாமி போடும் நாடகங்கள் எடுபடாது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம் என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.

இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் போடப்பட்ட ஒப்பந்தங்களால் வந்த முதலீடுகள் எவ்வளவு? அதன்மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எத்தனை? என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முடியாத முதலமைச்சர், “தமிழ்நாட்டை முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்றிவிட்டோம்” என்று கூறுவது நல்ல வேடிக்கை.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத நபரின் கதைதான் இதுவும். நான்காண்டு காலத்தில் தனது ஆட்சியின் தோல்வியை மறைக்கும் முயற்சி இது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில் முருகன் பேசுகிறார்” - ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details