தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா இறப்பு எண்ணிக்கையைக் கூட அரசு இருட்டடிப்பு செய்கிறது' - ஸ்டாலின் - திமுக தலைவர் அறிக்கை

கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கூட அரசு இருட்டடிப்பு செய்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

dmk
dmk

By

Published : Jun 7, 2020, 8:25 PM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகர மக்களின் உயிரோடு ஆபத்தான விளையாட்டு நடத்துவதைக் கைவிட்டு, சமூகப் பரவல் வந்துவிட்டதா, இல்லையா என்பது குறித்து ஆய்வுசெய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இறப்பு எண்ணிக்கையைக் கூட இதயமற்ற முறையில் இருட்டடிப்பு செய்யும் அதிமுக அரசின் செயல், ‘கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்டவற்றில், தினமும் கரோனாவிற்காக அனுமதிக்கப்படுவோர் எத்தனை பேர்? இந்த மருத்துவமனைகளில் உள்ள வென்டிலேட்டர்கள் எத்தனை? நோயால் பாதிக்கப்பட்ட எத்தனைப் பேர் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கிறார்கள்? கரோனா நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் எத்தனை? பிற நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் எத்தனை? என்பது போன்ற தகவல்கள், கரோனா மாநில கட்டுப்பாட்டு அறை செய்தி அறிக்கையில் இடம்பெறுவதே இல்லை. தனியார் மருத்துவமனைகளில் இறப்போர் எண்ணிக்கை பற்றியும் எந்தத் தகவலையும் வெளியிடுவதில்லை.

ஒரு மாநகராட்சியை நிர்வாகம் செய்ய முடியாமல், முதலமைச்சர் தவிப்பதை வேடிக்கை என்பதா - வேதனை என்பதா என்றே புரியவில்லை. சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் வாரியாக படுக்கைகள், வென்டிலேட்டர்கள் எண்ணிக்கையையும், கரோனா நோயால் இறந்தோரின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும். சென்னை மாநகர மக்களின் உயிரோடு, ஆபத்தான விளையாட்டு நடத்துவதை அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:‘விளம்பரம் தேடிக்கொள்வது ஸ்டாலின் தான்’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details