சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்னும் இளைஞர் மழையில் நனைந்து மயக்கமடைந்து விழுந்துள்ளார். அவர் உயிரிழந்துவிட்டதாக அனைவரும் கருதியுள்ளனர்.
இந்த தகவல் காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி ஆய்வாளர் ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்றார். உதயா உயிருடன் இருப்பதை அறிந்த ராஜேஸ்வரி, சிறிதும் தாமதிக்காமல் உதயாவை தனது தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிர்வாகத்தை சார்ந்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல், பருவமழைக் காலத்துப் பேரிடர் நேரத்தில், மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.