தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இ. கம்யூனிஸ்ட், மா. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்று தேர்தலை சந்தித்தன.
மொத்தமாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியதன் விளைவாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள், அதன் தாய் மாவட்டங்கள் நீங்கலாக 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் இன்னும் முழுவதுமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆளுங்கட்சியான அதிமுகவை விட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போட்டியிட்ட திமுகவினர் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
1986ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து திமுக சந்தித்தது. அப்போது, பெரும்பாலான நகரப் பகுதிகளைக் கைப்பற்றி வெற்றிக்கு அருகில் வந்தது திமுக. ஆனால், அதிமுகவை தோற்கடிக்க முடியவில்லை. இதற்கு எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கும், அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னமும்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த முறை அதிமுகவின் பழைய செல்வாக்கு, ‘சின்னம் சென்டிமென்ட்’ உள்ளிட்டவற்றையெல்லாம் தகர்த்தெறியும் விதமான வெற்றியைப் பெற்றுள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக.
2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திமுகவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த நிலையில், மக்கள் மனநிலை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக யூகிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல் அதிமுகவும் கையோடு கையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க முனைப்பு காட்டியது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது வீண், மாநில அரசு ஆதரவின்றி நலத்திட்டங்கள் நடைபெறாது உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கடந்து அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடித்து திமுகவை வெற்றி பெறச் செய்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்.