சென்னை பள்ளிக்கரணை பகுதி சாலையில் அதிமுகவினர் வைத்த பேனர் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது சரிந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது நொடிப்பொழுதில் லாரியின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிமுக பேனர் வைத்ததற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "அரசின் அலட்சியம், அலுவலர்களின் பொறுப்பின்மை, காவல் துறையினரின் கையாலாகாதத்தனமென, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகையானது சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கியிருக்கிறது. அவருக்கு என் இரங்கல்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.