சென்னை: மத்திய மற்றும் பொது பல்கலைகழகங்களில் மாணவர்கள் சேர்கைக்கு நுலைவுத்தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை திரும்பப் பெற்றிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலில், இன்று (ஏப்.6) கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில், 2022-2023ஆம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (National Testing Agency-NTA) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination-C.U.E.T.) மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளதையும், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு சமமான வாய்ப்பு:நீட் தேர்வைப் போலவே இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் ஒட்டுமொத்த மேம்பாடு சார்ந்த நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்பதை மீண்டும் தான் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், பெரும்பாலான மாநிலங்களில், மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள் என்றும், இந்த மாணவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர் என்றும் தெரிவித்துள்ளார்.