தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எந்த சான்றிதழும் சமர்பிக்கத் தேவையில்லை'- ஆர்.பி. உதயகுமார்! - ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டால் தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் இந்த பதிவேட்டில் எந்த சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

என்பிஆர் சட்டப்பேரவை விவாதம்  தேசிய மக்கள் தொகை பதிவேடு  தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதம்  ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

By

Published : Feb 20, 2020, 9:21 PM IST

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்திய போது, அது நீதிமன்றத்தில் உள்ளது எனவும், தனது ஆய்வில் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தீர்கள், அதனை ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு என்பிஆர் தொடர்பாக தனி நபர் தீர்மானத்தை வலியுறுத்தி கடிதம் அளித்திருந்தேன். இந்த கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த மாட்டேன் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பட்டியலிடத் தயாராக உள்ளேன். தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போன்றவை நடந்து வருகின்றன. நேற்றுகூட தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆகவே, என்பிஆர்-ஐ தமிழ்நாட்டில் மேற்கொள்ள மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்" என்றார்.

இதன்பின்பு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், "தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதனை, சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளவர்கள், சமுதாயத்திற்காக பாடுபட்டவர்கள் கூறுவதால் இதில் உண்மையிருக்கும் என மக்கள் நம்புகிறார்கள். 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 14 கேள்விகள் கேட்கப்பட்டன. அதே போன்று 2020ஆம் ஆண்டு எடுக்கப்படும் பதிவேட்டில் 14 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் தாய், தந்தை, மனைவி, பிறந்த ஊர் ஆகியவை குறித்த தகவல்தான் இஸ்லாமியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலையும், அதற்கான சான்றிதழையும் தர வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை" என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், " தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது இதற்காக திரும்ப பெற வேண்டும். அதுமட்டுமின்றி சிறுபான்மையினர்கள், ஈழத் தமிழர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். என்பிஆர் புது படிவத்தில் பண்டிகை குறித்து குறிப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். அதில், இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகள் இடம் பெறவில்லை. மதரீதியான பிளவை இதன் மூலம் ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது. ஆகவே, என்பிஆர் திரும்ப பெற வேண்டும்" என்றார்.

அமைச்சர் உதயகுமார் பேசுகையில், " சிறுபான்மை மக்களுக்கு இந்தப் பதிவேட்டின் மூலம் பாதிப்பு ஏற்படாது. இந்த பதிவேட்டை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் காஞ்சிபுரத்தில் அறிமுகம் செய்தார். பாவம் செய்வது நீங்கள், பழி எங்கள் மீது. தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் மட்டுமில்லாது தமிழ்நாட்டில் பிறந்த எந்த மக்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரணாக இந்த அரசு இருக்கும். 30 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக உள்ளோம். ஆனால் வாக்கு வங்கிக்காக சிலர் விஷ விதைகளைப் பரப்பி வருகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், "என்பிஆர் படிவத்தில் பண்டிகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இந்துக்கள் பண்டிகை என்றால் ஒப்புக்கொள்கின்றனர். ரம்ஜான், பக்ரீத் ஆகிய இஸ்லாமியர்கள் பண்டிகைகளை ஏற்றுக்கொள்வதில்லை. 19 லட்சம் பேரை அஸ்ஸாமில் ஹிட்லரைப் போல் சிறை வைத்துள்ளனர். இதுபோன்று தமிழ்நாட்டினுள் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்? இதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்.பி. உதயகுமார் பேசுகையில்,"அஸ்ஸாமில் நடப்பது வேறு. இங்கு நடப்பது வேறு. அஸ்ஸாமில் பிரிவினையின்போது சென்றவர்களுக்காகத்தான் என்ஆர்சி எடுக்கப்பட்டது" என்றார்.

என்பிஆர் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் அறிவிக்காததை எதிர்த்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் துணை முதலமைச்சரின் பதிலுரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க:பேச அனுமதி மறுப்பு - பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு!

ABOUT THE AUTHOR

...view details