இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு அரசு தேர்வுகள் இயக்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜனவரி 6 - 13ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஆன்லைனில் ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை தட்கல் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் பதிவு செய்ய, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு
சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.
தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.