தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2020, 11:28 PM IST

ETV Bharat / state

'பள்ளி திறந்து 2 வாரங்களுக்குப் பிறகே 10ஆம் வகுப்புத் தேர்வு நடத்த வேண்டும்'

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளிகளைத் திறந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகே நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Balakrishanan
Balakrishanan

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இந்தக் காலம் முழுவதும் தொடர்ந்து முற்றிலும் வேறான உளவியல், குடும்பச் சூழலில் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழல் வெவ்வேறு விதமான மாணவர்களுக்கு வெவ்வேறு விதமானப் பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்குத் தேர்வு எழுதும் மனநிலையை உருவாக்கிட வேண்டும். இம்மாத இறுதியிலும், ஜூன் மாதம் தொடக்கத்திலும் கரோனா நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் எனப் பரவலான கருத்து நிலவுகிறது.

இச்சூழ்நிலையில், மாணவர்களைத் தனிமனித இடைவெளியுடன் தேர்வு எழுத வைக்க என்ன ஏற்பாடுகள் அரசிடம் உள்ளது என்பதும்; ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான போக்குவரத்து ஏற்பாடுகள் என்ன என்பதும் தெரியாத சூழ்நிலையில், ஜூன் 1ஆம் தேதி தேர்வுகள் என்ற அறிவிப்பு பொருத்தமானதாக இருக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு குறைந்தபட்சம், இரு வாரங்களாவது வகுப்புகளை நடத்திவிட்டு, அதன் பிறகு பொதுத்தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும். பாடம் நடத்துவது என்ற நோக்கில் இல்லாமல், கல்வி பயில்வதற்கான மனநிலைக்கு மாணவர்களைக் கொண்டு வந்து, தேர்வு எழுத வைப்பது என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு, இதை அணுக வேண்டும்.

தற்போதைய பணியமர்த்தல் முறையில், 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அனைத்து உயர் கல்வி, பணியமர்த்தல், பணி உயர்வுகளுக்கு அடிப்படைக் கூறாக கணக்கில் கொள்ளப்படுகிறது, என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அதற்கு உகந்த முறையில் பள்ளிகள் இயங்குவது, அதன் பிறகு தேர்வுகள் நடத்துவது என்கிற முறையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு அரசு திட்டமிட்டு நடத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஏழை தொழிலாளர்களை சுரண்டும் பாஜக அரசு - ஸ்டாலின் காட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details