சென்னை:தமிழ்நாடு அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கான அரசாணையை கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி அன்று வெளியிட்டது.
அரசாணை வெளியிட்டும் அதற்கான முதற்கட்ட வேலைகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 1.48 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த காப்பகத்திற்கான உயர் மட்ட அலுவலர்களை நியமிப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதனால் காப்பகத்தை முழு வீச்சில் தொடங்க முடியவில்லை எனவும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
புலிகள் காப்பகத்தை தொடங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஐந்தாவது புலிகள் காப்பகம்
தமிழ்நாட்டில் முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் மற்றும் களக்காடு முண்டந்துறை உள்ளிட்ட நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 264 புலிகள் இருந்தது.
பிறகு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயம், தேனியில் உள்ள மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதை வன விலங்கு ஆர்வலர்கள், வன அலுவலர்கள் கண்டறிந்து இந்த இரண்டு வனப்பகுதிகளை இணைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்க ஒன்றிய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்தனர்.
மேலும் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமும் இதற்கு அனுமதியளித்த பிறகு, கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது.
திட்டம் தாமதம்
"இந்தப் புலிகள் காப்பகத்திற்காக எந்த ஒரு முதற்கட்ட வேலையும் நடைபெறவில்லை. மேலும் காப்பகத்திற்கான கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்தத் திட்டம் தாமதமாகிறது" என்றார் ஒரு உயிரியலாளர்.
ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை
வன விலங்கு ஆர்வலர் ஜோசப் ஹூவர் கூறுகையில், "இந்தப் புலிகள் காப்பகம் தொடங்கப்பட்டால், தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை உயரும். இந்தத் திட்டத்தின் மூலம் காப்புக்காடுகள் இணைக்கப்படுவதால், விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து ஒரு புதிய வழித்தடம் உருவாகும்.
இதற்காக ஒன்றிய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. பின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் காப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கொடுத்தது. விரைவில் இதற்கான அலுவலர்களை நியமிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.