கதை சொல்லும் பாரம்பரியம் கொண்ட இந்திய நாட்டில், நம் பாரம்பரிய கதைகளை தொடர்ந்து சொல்லி வரும்சென்னை மாங்காடுவை சேர்ந்த ஸ்ரீவித்யாவை நேற்று(செப் 27) பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டினார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி வாயிலாக மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். அதேபோல் நேற்று(செப் 27) தனது 69-ஆவது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் காலை 11 மணி அளவில் உரையாற்றினார்.
அப்போது பேசியவர், "கதை சொல்லும் பாரம்பரியம் கொண்ட இந்திய நாட்டில், நம் பாரம்பரிய கதைகளைக் கூறி அதனை அதிகளவில் பொக்கிஷம் போல் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கடத்தி வருவதில் கிராமப்புற மக்களுக்கு ஒரு பெரும் பங்குண்டு. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை பெற்றோர் பழக வேண்டும்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாரம் ஒரு நபர் வீதம் குடும்ப உறுப்பினர்களுக்கு கதைகள் சொல்லி மகிழலாம். கரோனா தொற்று குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளது. நமது கிராமங்களின் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இசையுடன் கலந்து புராணம் உள்ளிட்ட கதைகள் வாயிலாக பாடப்படும் வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா என்பவர் வில்லுப்பாட்டை புராண கதைகள் மூலம் கூறுவது வரவேற்கத்தக்கது" என்றார்.
சென்னை மாங்காடுவை சேர்ந்த ஸ்ரீவித்யா(35) என்பவர் 2016 ஆம் ஆண்டிலிருந்து கதை சொல்லியாக தொடங்கி புராண கதைகளயும், நமது நாட்டு கலாசாரம் பண்பாடுகளையும், கலைகளையும் கதைகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சொல்லி வருகிறார்.
இதுதொடர்பாக சென்னை மாங்காடுவை சேர்ந்த ஸ்ரீவித்யா ஈடிவி பாரத்திற்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,
”2016ஆம் ஆண்டில் இருந்து எனது பயணம் ஒரு கதை சொல்லியாக தொடங்கியது. இதுவே தற்போது என் தொழிலாக உள்ளது. குழந்தைகள், பெரியோர்கள், வயதானவர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நமது நாட்டின் பாரம்பரிய, பிற கதைகளை கூறியிருக்கிறேன்.