இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படைப் படகுகளில் இருந்து கற்களை வீசித் தாக்கி இருக்கின்றனர். ஒரு மீனவர் மண்டை உடைந்தது; பலர் இரத்தக் காயம் அடைந்துள்ளனர். மீன்பிடிப்பதற்காகத் தமிழக மீனவர்கள் விரித்து இருந்த நூற்றுக்கணக்கான மீன் வலைகளையும், இலங்கைக் கடற்படையினர் அறுத்து எறிந்துள்ளனர்.
இன்று நேற்று அல்ல; கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்; படகுகளைப் பறிமுதல் செய்தனர்; பெருந்தொகையை வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.