தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பு...! ஓபிஎஸ்-இபிஎஸ் கடும் கண்டனம் - இலங்கை

சென்னை: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரங்கல்

By

Published : Apr 21, 2019, 7:26 PM IST

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் காலையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஈஸ்டர் திருநாளான இன்று காலை 8.45 மணியளவில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட ஆறு இடங்களில்திடீரென்றுதொடர் குண்டுவெடிப்பு அரங்கேறியது. இதில் 207 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலை கேள்விப்பட்டு பல்வேறு தரப்பினர் அதிர்ச்சி அடைந்ததோடு தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக தலைமையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இயேசுபிரான் மானுடத்தை மீட்க தன்னையே சிலுவையில் பலியாக்கிக்கொண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மகத்தான விழா புனித ஈஸ்டர் பெருவிழா. அவ்விழாவினைக் கொண்டாட இலங்கையில் உள்ள தேவாலயங்களில் குழுமியிருந்த மக்கள் மீது மிகக் கொடூரமான வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் செய்தி கேட்டு சொல்லொண்ணா வேதனையில் ஆழ்ந்திருக்கிறோம்.

பெரும்பாலும் தமிழ் கிறிஸ்தவ பெருமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அப்பாவி பொதுமக்கள் ஆண்டவனை வழிபடக் கூடியிருக்கும்போது, அவர்களை தாக்கியவர்கள் எத்தனை இரக்கமற்றவர்களாக இருப்பார்கள் என்று நெஞ்சம் பதைபதைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க பிரார்த்திக்கிறோம்.

அவர்தம் குடும்பங்களுக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டி நிற்கிறோம். காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

முற்றிலும் மனிதாபிமானமற்ற முறையில், சிறிதும் இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல்களுக்கு மீண்டும் எங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details