கொழும்பு: நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பாக பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் இந்த வாரம் நியமிப்பதாக இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமித்த பின்னர், அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை சட்டமாக்குவதற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அதிபர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.
"புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் கோத்தபயவின் மூத்த சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததையடுத்து, சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகுத்துள்ள நிலையில், இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக அரசாங்கம் இல்லாத நிலையே காணப்பட்டது. அமைச்சரவை இல்லாமல் நாட்டை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.