சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "ஆரோக்கியமற்ற நிலையில் இருந்த தேதிமுக தலைவர் கேப்டன் விஜயகாந்த், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார், மக்கள் சேவையை புத்தெழுச்சியுடன் தொடங்குவார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். மேலும், அவரின் நலனுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்தோம். ஆனால், கால சக்கரம் அவரை தன்னிடம் அழைத்துக்கொண்டுள்ளது.
விஜயகாந்த் ஒரு புதிய வரலாறு. அவரை பற்றி ஓரிரு வார்தைகளில் குறிப்பிட முடியாது. இவர் மறைந்த எமது தலைவர், அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் நட்பில் இருந்தவர். மேலும், இலங்கை மக்களுக்காக உரிமை குரல் கொடுத்தவர். கால்வைத்த அனைத்து துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அத்தகைய தலைவரின் மறைவு பேரதிர்ச்சியையும், பெரும் வேதனையும் அளிக்கின்றது.
எளிமையையும், மக்கள் சேவையையும் வலிமையாக நினைத்து வாழ்ந்தவர். இந்நிலையில், அன்னாரது மறைவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாறட்டும்" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:'அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்' - ரஜினிகாந்த் விஜயகாந்த் குறித்து உருக்கம்