சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு சேலம் குற்ற வழக்கில் காவல்துறை பிடியிலிருந்து தப்பி ஓடிய போதைப் பொருள் கும்பல் தலைவன் முகமது சித்திக்கை ஓமன் இன்டர்போல் அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 22) கைது செய்துள்ளனர். இலங்கையில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களை கடத்தி விநியோகிக்கும் போதை கும்பல் தலைவன் முகமது சித்திக் ஓமன் நாட்டில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அபுதாபி எல்லையில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சித்திக்கிடம் இந்திய பாஸ்போர்ட் கைவசம் இருந்ததை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை இணைந்து நடத்திய் ரகசிய ஆபரேஷன் மூலம் முகமது சித்திக் ஓமன் நாட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், சித்திக்கின் கூட்டாளிகள் பெங்களூரில் மத்திய உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்திய - நேபாள எல்லையில் தனது கூட்டாளிகள் மகிழாங்கமுவே சஞ்சீவா மற்றும் கோதா அசங்கா ஆகிய போதை பொருள் கடத்தல் கூட்டாளிகளுடன் தங்கி இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேரையும் இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் முகமது சித்திக் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
சித்திக்கிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு, கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றொரு குற்ற வழக்கில் சேலத்தில் காவல்துறையிலிருந்து தப்பித்து தலைமறைவானதும், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற சித்திக்கை கண்டுபிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தமிழக காவல்துறை தீவிரமாக தேடி வந்தது.
தற்போது ஓமன் நாட்டில் கைது செய்யப்பட்ட முகமது சித்திக்கை இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகமது சித்திக் பல்வேறு தீவிரவாத சர்வதேச கும்பல்களுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கடல் வழியாக படகுகள் மூலம் இந்தியா வழியே இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டு வரும் பொழுது பாகிஸ்தானில் இருந்து கண்டெய்னர்களில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்துவதில் முகமது சித்திக் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
குறிப்பாக பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனின் சகோதரியை திருமணம் செய்து கொண்டு சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் கடல் வழியாக முகமது சித்திக் செய்து வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப் பொருள் கும்பல் சீசெல்ஸ் மற்றும் மாலத்தீவு போன்ற தீவுகளிலும் போதைப் பொருளை கடத்த மிகப்பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க:குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல்... 12 பேர் மீது வழக்குப்பதிவு.. மீண்டும் மாணவர்கள் மோதல்!
சென்னை செல்போன் கடை உரிமையாளருக்கு தொடர்பு:கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் ராயபுரத்தைச் சேர்ந்த மன்சூர் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மண்ணடி கடற்கரைப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் செல்போன் கடையை மன்சூர் அவரது சகோதரர்கள் மூலம் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. மன்சூர் வீட்டிலும் மற்றும் முக்கியமாக மன்சூர் நடத்தும் செல்போன் கடையிலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக க்யூப் பிரிவு அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்சூரை தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கிருந்து பல்வேறு முக்கிய எலக்ட்ரிக் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் அடுத்தடுத்து மிகப்பெரிய அளவில் கடல் வழியாக பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப் பொருள்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு விழிஞ்சம் துறைமுகப் பகுதியில் 300 கிலோ அளவிலான ஹெராயின் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2500 கிலோ பாகிஸ்தானில் இருந்து ஹாஜிசலிம் என்ற போதைப்பொருள் கும்பல் தலைவன் மூலமாக இந்தியா வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் போது பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திருச்சி முகாமில் உள்ள இலங்கையைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கையும் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்டர்போல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் முகமது சித்திக் மற்றும் பெங்களூரில் கைது செய்யப்பட்ட முகமது சித்திக் கூட்டாளிகள் ஆகியோருக்கும் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது மத்திய உளவுத்துறை மற்றும் தமிழக கியூ பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் மூலம் இந்தியாவின் போதைப்பொருள் நெட்வொர்க் சிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மெக்சிகோவில் இந்தியர் சுட்டுக் கொலை - கொள்ளை சம்பவத்தில் நிகழ்ந்த சோகம்!