சென்னை:கச்சத்தீவுக்கு அடையாளமே அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம் தான். சேதுபதி மன்னர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை சேர்ந்த சீனிகுப்பன் கட்டிய இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா இந்தியா - இலங்கை இடையேயான சமூக நல்லிணக்கத்தின் உறவு பாலமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்காக கச்சத்தீவு சென்ற தமிழர்கள் அங்கு புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த புத்தர் சிலையை இலங்கை கடற்படை தான் நிறுவியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்பி சார்லஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் ஈடிவி பாரத் தமிழ்நாடு தான் முதலில் செய்தி வெளியிட்டது. பின்னர் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அதோடு இலங்கை அரசு உடனடியாக தலையிட்டு, சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் கச்சத்தீவில் இருந்து புத்தர் சிலையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதனிடையே, கச்சத்தீவில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டதாக, யாழ்ப்பாணம் மாவட்ட ஆயருக்கு இலங்கை கடற்படை தகவல் தெரிவித்ததுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட ஆயர் அருள் தந்தை ஜெபரட்ணம் இலங்கை கடற்படைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில்,"புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சத்தீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை கடற்கடையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்திற்கு அறிவித்துள்ளனர். அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்பாஇ அதிகாரிகள் மற்றும் கச்சத்தீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: MK Stalin: விழுப்புரத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட முதலமைச்சர்.. ஐடி பார்க் முதல் அரிசி ஆலை வரை முக்கிய ஹைலைட்ஸ்!