சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளாக நடித்த, இலங்கையை சோ்ந்த போலி ஆசாமிகள் இருவா், இலங்கை பெண் பயணிகளிடம் தங்கநகைகளை பறித்துவிட்டு, தலைமறைவானாா்கள். சென்னை விமானநிலைய போலீசாா், சிசிடிவி காட்சிகள் உதவியுடன், போலி சுங்க அதிகாரிகள் இருவரை கண்டுப்பிடித்து, கைது செய்து, அவா்களிடமிருந்து 125 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனா்.
இலங்கையைச் சேர்ந்த பெண்கள் நதிஷா ரோஷினி (47), வசீகா (45). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். சுங்கச் சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து வெளியில் வந்தனர். அதன் பின்பு மெட்ரோ ரயிலில் சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலைய கார் பார்க்கிங் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 2 பேர் இந்த பெண்களை நிறுத்தி, நாங்கள் கஷ்டம்ஸ் விஜிலென்ஸ் ஆபீசா்கள் என்று தங்கள் அடையாள அட்டையை காட்டினர். நீங்கள் அதிகநகைகளை அணிந்துள்ளீா்கள். இந்த நகைகளுக்கு டூட்டி கட்டாமல், வெளியில் எடுத்து வந்து விட்டீர்கள். மீண்டும் சுங்க அலுவலகத்திற்கு வந்து, டியூட்டி கட்ட வேண்டும் என்று கூறினா்.
அதோடு நதிஷா அணிந்திருந்த தங்க வளையல்கள் 59 கிராம் கழற்றி வாங்கிக் கொண்டனர். அதோடு இரண்டு பேர்களின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி பரிசோதித்து விட்டு திருப்பி கொடுத்தனா். பின்பு சுங்க அலுவலகத்திற்கு வந்து, டியூட்டி கட்டிவிட்டு, நகைகளை வாங்கிக்கொள்ளுங்கள் கூறிவிட்டு, சென்றனா்.
அவர்கள் உண்மையான சுங்க அதிகாரிகள் என்று கருதிய நதிஷா, டியூட்டி கட்ட பணம் எடுத்துக்கொண்டு விமான நிலைய சுங்க அலுவலகம் சென்றாா். ஆனால் அதிகாரிகள் நாங்கள் உங்களிடம் இருந்து நகைகளை எதுவும் வாங்கவில்லை என்று கூறினா். இப்போது வெளியே சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் எங்களிடம் நகைகளை வாங்கினார், என்று கூறினா். ஆனால் அதை உறுதியாக சுங்க அதிகாரிகள் மறுத்து, உங்களை யாரோ ஏமாற்றியுள்ளனா் என்று கூறினா்.