சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் இருந்து பிட்ஸ் ஏர் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் காலை 10.45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த ரமலான் சலாம் (33), அவருடைய மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் இந்த விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அப்போது, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவர்களது பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்தனர். இந்திய பாஸ்போர்ட்டை ரமலான் சலாமும், அவருடைய குடும்பத்தினரும் வைத்திருந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த இவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்கள் எவ்வாறு வந்தது என்று குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ரமலான் சலாம், கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், அதன் பின்பு இலங்கைக்கு திரும்பிச் செல்லாமல், சென்னை வண்டலூர் அருகே தங்கியிருந்ததாகவும், அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பேன் கார்டு போன்றவைகளை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
அதோடு அவைகள் மூலமாக இந்திய பாஸ்போர்ட் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பெற்றதாக தெரிவித்தார். மேலும், இந்த பாஸ்போர்ட் வாங்கும்போது முறைப்படி வண்டலூர் ஓட்டேரி போலீஸ் நிலைய வெரிஃபிகேஷன் நடந்து, அதன் பின்புதான் தங்கள் குடும்பத்தினருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.