சென்னை:இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மேலும், இவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை ஜூன் 9ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.
இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றித சரிபார்ப்பு பணி இன்று(ஜூன் 5) தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் சேர்க்கை மையத்தில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகளின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையில் விளையாட்டுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 500 இடங்களுக்கான சேர்க்கை நடத்தப்படும்.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறும்போது, "பொறியியல் படிப்பிற்கு மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை பெறப்பட்டன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு 18, 670 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எஸ்எம்எஸ் மூலம் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மாணவர்களை நேரில் அழைத்துள்ளோம். உதவி மையத்தின் மூலம் தொடர்பு கொண்டும் அவர்களை சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நேரில் அழைத்துள்ளோம். பொதுப் பிரிவு கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்ற வருகின்றன. மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தது போல் வரும் 26ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.