சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு திருவிழா! சென்னை: சென்னை ஐஐடியில் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுத் திருவிழா நடைபெற்றது. "ஸ்போர்ட்ஸ் ஃபார் ஆல்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த விளையாட்டுத் திருவிழாவைச் சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி தொடங்கி வைத்தார்.
இதில், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதிலும் இருந்து 214 மாற்றுத் திறனாளிகள், 255 பராமரிப்பாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கையில் முதன்முறையாக விளையாடினர்.
விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பின்னர் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, "உடற்பயிற்சிகள், இயக்குதசை செயல்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அதன்படி, மாற்றுத்திறனாளிக்கு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அவர்களின் திறனை வளர்க்கும் வகையில் பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை ஐஐடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகள் பொதுமக்களின் பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்குச் சென்னை ஐஐடியால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்காகத் தயாரித்து வழங்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க:சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் - டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை!