சென்னையை அடுத்துள்ள பம்மல் பஜனை கோயில் தெருவில், இன்று எரிந்து கருகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருந்துள்ளது. இதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த சங்கர் நகர் காவலர் கண்டு அதிர்ச்சியடைந்து, அப்பகுதியில் விசாரித்தபோது, அது ஜெயராஜ் என்பது தெரியவந்தது. உடனே ஜெயராஜின் உடலைக் கைப்பற்றிய காவலர், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ஜெயராஜ் கையில் பணம் இல்லாததால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கீரை வியாபாரம் செய்யலாம் என்று நினைத்து, குன்றத்தூர் சென்று கீரை வாங்கி வந்து பம்மலில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட கீரை வியாபாரி இவரைப் போலவே அதேபகுதியில் மூர்த்தி என்பவரும் பல ஆண்டுகளாக கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குன்றத்தூர் சென்று கீரை வாங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாற ஆத்திரத்தில் மூர்த்தி கத்தியால், ஜெயராஜ் கையை வெட்டியுள்ளார்.
உடனே அருகிலிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மூர்த்தி மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஜெயராஜ் புகார் அளித்துள்ளார். அப்புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், மூர்த்தியை அழைத்து விசாரிப்பதற்குள், மிகுந்த மனஉளைச்சல் அடைந்த ஜெயராஜ் இன்று அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜெயராஜ் தற்கொலைக்குக் காரணமான மூர்த்தியைக் கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.