சென்னை:பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே வண்ணாரப்பேட்டை உதவி ஆய்வாளர் அன்புதாசன் உட்பட காவலர்கள் நேற்றிரவு (பிப். 5) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்றை, காவலர்கள் நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து, தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் அன்புதாசன்(28) மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்கள் என மொத்தம் 7 பேர் மீது மோதிவிட்டு, கம்பத்தில் மோதி நின்றது. உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் விபத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் உள்பட 7 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற காரை பொதுமக்கள் மடக்கி, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டை வீரபதி செட்டி தோட்டத்தை சேர்ந்த மோகன்(40) என்பவர் தனது குடும்பத்துடன் திருத்தணி கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது, திடீரென காரின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. ஓட்டுனர் மோகனை போலீசார் கைது செய்து, அவர் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக செயல்படுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.! ஒருவர் பலி