சென்னை: ’தனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர் கல்வியின் பொற்காலம் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருந்துகொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு ஆளுநருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ’கையில் பட்டத்துடனும் கண்களில் கனவுகளுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் பெயரோடு இனி சேர இருக்கும் பட்டம் என்பது இந்த சமூகத்தில் உங்களை அடையாளம் காட்டும் அறிவு அடையாளம். இந்த பட்டத்தோடு உங்களுடைய பட்டப் படிப்பு முடியப் போவதில்லை. அடுத்தடுத்த உயர்வுக்கு இது ஒரு அடித்தளம், அவ்வளவுதான். எந்த மனிதரின் சிந்தனைக்கும் அவரது மரணத்தில்தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அது போலத்தான் படிப்பும் இறுதிவரை தொடர வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு வளர்ச்சிக்குக் காரணமானவர்களை உருவாக்கிய இடம்தான் இந்தச் சென்னைப் பல்கலைக்கழகம். அத்தகைய திறமைசாலிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெற வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில், சிந்தனையில், அறிவாற்றலில் மேன்மை பெற்றவர்களாக வளர வேண்டும் என்பது தன்னுடைய ஆசை. தமிழ்நாடு அரசின் மிகமிக முக்கியமான இலக்காக இது அமைந்திருக்கிறது. அதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அரசிடம் 'வேலைகள் இருக்கின்றனது. ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை' என்று சொல்கின்றனர். அப்படியானால் இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் என்று நினைக்கிறது.
வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தி தனியார் நிறுவனங்களின் மூலமாக பயிற்சிகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஏழை எளிய, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு அந்த வாய்ப்பை அரசுதான் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். அதனை செயல்படுத்துவதற்காகத்தான் ஏராளமான திட்டங்களை அரசு தீட்டி இருக்கிறது.
வேலை கிடைக்கவில்லை என்று யாரும் இருக்கக் கூடாது: வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது. தகுதியான இளைஞர்கள் வேலைக்குக் கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும் சொல்லக் கூடாது. அத்தகைய நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க நினைக்கிறது. அதற்காகத் தான் பல திட்டங்களைத் தீட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.