சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பயணிகள் மற்றும் விமான சேவைகளுக்கு ஏற்றார்போல் விமானநிலையத்தை விரிவுப்படுத்தும் பணியை இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கி அதற்கான பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் ரூ.2,400 கோடி திட்ட மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் இந்த ஒருங்கிணைந்த புதிய முனையங்கள் டிஜிட்டல் மையமாக அமைக்கப்படுகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இப்பணி, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காரணமாக விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன. அதோடு கட்டுமானப் பொருட்கள் தாமதம், நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம் காரணமாக பணிகள் தாமதமாக நடந்து தற்போது ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தின் முதல் ஃபேஸ் (first phase)பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளது.
இந்த பணிகள் ஃபேஸ் 1, ஃபேஸ் 2 என்று இரு பணிகளாக நடத்தி முடிக்கப்படுகிறது. முதல் ஃபேஸ்சில், 6 அடுக்கு மல்டி லெவல் காா் பாா்க்கிங், புதிய நவீன வருகை, புறப்பாடு முனையம் T2 ஆகியவைகள் உட்பட பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுறிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்டா்கள், விவிஐபிகளுக்கான ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் இந்த முதல் ஃபேஸ்சில் அடங்குகிறன. இந்த முதல் பேஸ்சில் அனைத்து பணிகளும் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த புதிய முனையம் 5 தளங்களை கொண்டுள்ளது. புதிய முனையத்தின் கீழ் தளத்தில் பயணிகளின் உடமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் பயணிகளுக்கான வருகை, இரண்டாம் தளத்தில் புறப்பாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.மேலும் இயற்கை அழகுடன் கூடிய ஸ்கை லிப்ட் எனப்படும் சூரிய ஒளிக்கதிர்கள் விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் வரும்படியும் பனை மரங்கள் வடிவில் தூண்கள் அமைக்கப்பட்டு, கலையின் நுட்பத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு அதி நவீன சொகுசு இருக்கைகள் சாய்வு இருக்கைகள் என ஏராளமான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் எண்ணிக்கை 3.5 கோடியாக உயரும்!
சென்னை விமானநிலையத்தில் தற்போதைய முனையத்தில் ஆண்டிற்கு 1.7 கோடி பயணிகள் கையாளப்படும் திறன் உடையதாக உள்ளது. ஆனால் புதிதாக அமைக்கப்படும் புதிய ஒருங்கிணைந்த முனையம் 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக அமையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு தகுந்தவாறு பயணிகளுக்கான வசதிகளும் அதிகரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமானநிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் செக்-இன்-கவுன்டா்கள் 64 மட்டுமே உள்ளன. ஆனால் புதிய ஒருங்கிணைப்பு முனையத்தில் 140 செக்-இன்-கவுன்டா்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுன்டா்கள் முதல் கட்டமாகவும் அடுத்த 40 கவுன்டா்கள் இரண்டாம் கட்டமாகவும் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய முனையம் T 2 செயல்பாட்டிற்கு வந்ததும் தற்போது சா்வதேச முனையத்தில் பயன்பாட்டில் இருக்கும் T3 பழைய முனையம் சுமாா் 42,300 சதுர அடி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்படும் என்றும் அதன் பின்பு அந்த இடத்தில் ஃபேஸ் 2 கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையை விட வரும் 2024 ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.