சென்னை: கரோனா சூழலிலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 கர்ப்பிணிகளுக்குத் தனிக் கவனம் செலுத்தி சிறப்பான சிகிச்சையளித்துள்ளது.
ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். பிரசவ நேரத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு இருக்கும். கருவுற்ற நாளிலிருந்து குழந்தைப் பிறப்பு வரை பெண்கள் பார்த்து பார்த்து செயல்பட வேண்டியிருக்கும். அந்த வரிசையில், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா சூழல் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. மனச்சோர்வு, உடல்நிலை மாற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகமாக இருக்கும். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை சரியாக பின்பற்ற வேண்டியது அவசியம்.
கரோனாவால் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் நிலவும் இத்தகைய சூழலில், சென்னையில் 2000-க்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி பிரசவ தேதி குறிக்கப்பட்ட 5 நாள்களுக்கு முன்பே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையின் முடிவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை, ராயபுரம் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, கஸ்தூரிபா மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 500 கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு சிறப்பு வார்டுகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
500 கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி அளித்த பேட்டியில்:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு துறை ஏற்கனவே தனியாக செயல்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டு, அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. நோயின் தன்மைக்கேற்ப கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
வென்டிலேட்டர் வசதிகள்:
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையால் தாயும் சேயும் காப்பாற்றப்படுகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 100-க்கும் அதிகமான வென்டிலேட்டர்கள் உள்ளன. ஏற்கனவே 30 வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட நிலையில், புதிதாக 23 வென்டிலேட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கரோனா சிகிச்சைக்காக 60 வென்டிலேட்டர்கள் உள்ளன. சிகிச்சையை பொறுத்தவரை நோயாளிகள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
500 கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம்
நட்புடன் பழகும் செவிலியர்கள்:
இங்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி செவிலியர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிகள் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் பயத்தை போக்குவது முதல் கடமையாக இருக்கிறது. செவிலியர்கள் நட்புடன் பழகுவதால் கர்ப்பிணிகள் தன்னம்பிக்கை பெறுகின்றனர். கரோனா தொற்று பற்றிய புரிதலை ஏற்படுத்தி, மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளை கையாள பயிற்சி அளிக்கிறோம்.
அயராது உழைக்கும் மருத்துவர்கள்:
இரு உயிரை காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மருத்துவர்களுக்கு அதிகம் உள்ளது. கர்ப்பிணிகளிடம் செவிலியர்கள் அணுகும் முறையையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதற்காக அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கவலைகளை மறக்க புன்னகை மட்டுமே சிறந்த மருந்து என்பதை செவிலியர்களிடமும், கர்ப்பிணிகளிடமும் எடுத்துரைத்து வருகிறோம். மருத்துவர்களும், செவிலியர்களும் அயராது உழைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் மீனா கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். கரோனா உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகளில் சிலர் தைராய்டு பிரச்னையோடு இருக்கலாம். தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கு ரத்தப்போக்கு, உடல்சோர்வு, அடிக்கடி மாதவிடாய், உடல் எடை கூடுதல் போன்ற பிரச்னைகள் இருக்கும். ரொம்பவே கவனமாக சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். இதற்காக அந்த வார்டில் சிறப்பு மருத்துவர் முதல் மூன்று விதமான பிரிவைச் சேர்ந்த செவிலியர்கள் வரை சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பார்கள்.
500 கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம்
இதுவரைக்கும் 382 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளித்துள்ளோம், 220 பேருக்கு பிரசவம் பார்த்துள்ளோம். அதில் 150 பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவமும், 70 பேருக்கு சுகப்பிரசவமும் பார்க்கப்பட்டது. தற்போது 24 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் கவனமாக பாதுகாப்பான முறையில் சிகிச்சையளிக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை என்றார்.
கரோனா போரில் முன்னின்று செயல்படும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் கர்ப்பிணிகளை கையாளும் இவர்களின் சேவை போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு நம் வணக்கத்தை உரித்தாக்குவோம்.