கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களை இரண்டு மடங்காக உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதனால், நடந்தே சொந்த ஊருக்கு செல்பவர்களை கண்டறிந்து அவர்கள் குறித்த விவரங்களை பகிர வேண்டும் என மாநில அரசுகளிடம், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக 15 சிறப்பு ராஜ்தானி ரயில்களும் இயக்கப்பட்டன. இருப்பினும், ஜூன் 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு ரயில் சேவையை இயக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டிற்கான ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி சிறப்பு ரயில் புதிய அட்டவணையில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் 200 சிறப்பு ரயில்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது. அந்தப் பட்டியலில் நாட்டின் முக்கிய நகரங்களையும், இரண்டாம் கட்ட நகரங்களையும் இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இதில் ஒரு ரயில்கூட தமிழ்நாட்டிற்கு இயக்கப்படவில்லை.