சென்னை:2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் அறிவிப்பு எண்.26-ன் அடிப்படையில், சென்னை பள்ளிகளில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்களை பொதுவான தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து, நேரடியாகவும் மற்றும் இணையதளம் வழியாகவும் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சென்னை மாநகராட்சி 2023-24 பட்ஜெட்டில், பல்வேறு கல்வி சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டது. அதனடிப்படையில், சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பொதுத் தேர்வுடன் கூடிய NEET, CUET, CLAT, HT-JEE, ICAR, NDA, NATA, NIFT போன்ற மதிப்புமிகு நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக அகாதெமி ஆஃப் ஸ்டெம் எக்ஸ்லன்ஸ் (Academy Of Stem Excellence) என்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை உள்ள அரசு பள்ளிகளில், பள்ளிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சியும், மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக பாதுகாப்பான தங்கும் விடுதிகளும், அவரவர் பள்ளிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியும், ஆரோக்கியமான உணவு, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், மெய்நிகர் வகுப்பறைகள், இணையவழி கல்விக்காக அனைவருக்கும் கையடக்கக் கணினிகள், 8ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகம் உள்ளிட்ட வசதிகளும், பயிற்சியும் அனுபவமும் மிக்க ஆசிரியர் குழுக்களுடன் தொடர் தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் நடத்தப்பட்டு, குறைதீர் கற்பித்தல், மருத்துவ ஆலோசனைகள், உளவியல், ஆளுமைத் திறன், உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.