தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையிலிருந்தும் - திருப்பூர், கோவை, பெங்களூரு போன்ற தொழில் நகரங்களிலிருந்தும் பிற நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளுக்கு கணினி மூலமாக முன்பதிவு செய்வதற்கு 26 சிறப்புக் கணினி முன்பதிவு நிலையங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சென்னையிலிருந்து இந்த ஆண்டு எட்டு லட்சம் பயணிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக ஆறு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
- கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
- கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
- திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் நசரத்பேட்டை அவுட்டர் ரிங்ரோடு வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.