உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவற்றுடன் அடிப்படைத் தேவைகள் முடிந்துவிடுவது இல்லை. தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்கும் சுத்தமும் சுகாதாரமும் நாட்டின் பண்பாட்டை கட்டமைக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவதில்லை, சுகாதாரம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல, அது ஒரு கலாசாரம். மாற்று சக்தியாக செயல்பட வேண்டிய தூய்மை இந்தியா திட்டம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் சென்னை அருகே கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை கிராம நிர்வாக அலுவலர்கள் கையாடல் செய்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், கொளப்பாக்கம், புத்தூர் மப்பேடு ஆகிய ஐந்து ஊர்கள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்டபில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இலவச கழிப்பறை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தி வருகின்றன. அதன்படி ஒரு வீட்டிற்கு கழிப்பறை கட்டுவதற்கு மத்திய அரசு 7ஆயிரத்து 200 ரூபாயும், மாநில அரசு 4 ஆயிரத்து 800 ரூபாயும், மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் இந்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு குடியிருப்பு சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, போன்ற நகல்களை வைத்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
2018 -19ஆம் ஆண்டு சதானந்தபுரம் எம்ஜிஆர் தெருவில் உள்ள 200 வீடுகளில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் ஒரு சில வீடுகளுக்கு பேஸ்மென்ட் போட்டு ஹாலோ பிளாக் கல் மட்டுமே எழுப்பியுள்ளனர். அதற்கு மேற்கூரையோ, உள்ளே கழிப்பறை சாதனங்களோ எதுவும் இல்லாமல் கழிப்பறையை கட்டி முடித்தது போன்ற புகைப்படத்தை அலுவலர்கள் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.