தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இரவலர்களின் நம்பிக்கை நாயகர்கள் இவர்கள்' - தேடிச்சென்று உணவளிக்கும் தன்னார்வலர்கள் - யாசகர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் தன்னார்வலர்கள்

சென்னை: கரோனா ஊரடங்கால் ஆதரவற்ற இரவலர்கள் பசியில் உயிரிழந்துவிடக் கூடாது என தன்னார்வலர்கள் இவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். அவர்கள் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு...

special-story-of-volunteers-helping-beggars-
special-story-of-volunteers-helping-beggars-

By

Published : Jun 12, 2020, 1:03 PM IST

Updated : Jun 16, 2020, 7:00 PM IST

தனக்கு கடும்பசி இருந்தாலும்கூட தன் குழந்தைக்கு உணவை கொடுத்து அதன் புன்னகையில் பசியை மறந்து மகிழ்வோர்தான் பெற்றோர். எனினும் இன்றைய காலத்தில் பிள்ளைகளாலேயே பெற்றோர்கள் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு ஆதரவற்றவர்களாக்கப்படும் காட்சிகளை நாம் தினந்தோறும் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.

சாலையோரங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் என நகரின் பல இடங்களில் வயது முதிர்ந்த நிலையில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அனைவரிடமும் கையேந்தும் இரவலர்களின் நிலை ஊரடங்கு காலத்தில் என்ன ஆனது என்று நாங்கள் அறிய முயன்றோம்.

வெளியூர்களில் சிக்கியவர்கள், வெளி ஊர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள் என பலர் கரோனா காரணமான ஊரடங்கில் உணவில்லாமல் சிரமப்பட்டனர்.

சென்னையில் தோராயமாக ஒன்றரை லட்சம் இரவலர்கள் இருக்கின்றனர் என கூறப்படுகிறது. சாதாரணமாகவே போதிய உணவு கிடைக்காத நிலையில், இவர்கள் உணவுக்காக என்ன செய்வார்கள், எவ்வாறு உயிர் பிழைத்திருப்பார்கள் என்னும் மில்லியன் டாலர் கேள்விக்கு பதிலளித்தார் சென்னை தன்னார்வலர்களில் ஒருவரான கார்த்திக்.

தேடிச்சென்று உணவளிக்கும் தன்னார்வலர்கள்

"சாதாரணமாகவே சாலையோர ஆதரவற்றவர்களுக்கு என்னைப்போல் உள்ள தன்னார்வலர்கள் உணவுகள் வழங்கிவந்தோம். தற்போது நோய் தொற்றால் அறிவிக்கபட்டுள்ள ஊரடங்கால் நிச்சயமாக நகர் முழுமையாக உள்ள இரவலர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என உணர்ந்ததன் விளைவாக ஊரடங்கின் முதல் நாள் தொடங்கி இன்று வரை அவர்களுக்கு மூன்று வேளையும் பசியார உணவுகளை வழங்கி வருகிறோம்" என்றார்.

நம் கண் முன்னரே ஆதரவற்ற இரவலர்களுக்கு தான் கொண்டு வந்திருந்த முகக்கவசங்களையும், உணவுப் பொட்டலங்களையும் கார்த்திக் வழங்கினார்.

நகரில் முகப்பேரில் ஆரம்பித்து பாரிஸ் வரையில் உள்ள ஆதரவற்றவர்களை தேடிச் சென்று உணவுகளை வழங்கி வரும் தன்னார்வலர் முத்துக்குமரன் கூறுகையில், "கரோனா தொற்றால் பலர் இறந்துள்ளனர் என்னும் நிலையில், ஊரடங்கு தொடங்கி இன்று வரை இவர்களில் பலரும் உணவில்லாமல் மாய்ந்துவிடக்கூடாது என்பதால் தொடர்ந்து அவர்களுக்கு மூன்று வேளை உணவுகளை வழங்கி வருகிறோம். இதனால் நகரில் இருக்கும் இரவலர்களில் ஒருவர் கூட ஊரடங்கு காலத்தில் உயிர் இழக்கவில்லை" என்று கூறும்போது நம்மனது நெகிழ்ச்சியடைகிறது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும், ஆளைக்கொல்லும் நோய் தொற்றிலும் காப்பாற்றப்பட்ட இவர்கள் அடுத்து வரவுள்ள பருவ மழை காலத்திலும் தன்னார்வலர்களால் காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கு இவர்கள் இருவரின் செயல்பாடுகளே சாட்சியாக உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான மனிதநேயம் கொண்ட தன்னார்வலர்களால் வாழும் இரவலர்களுக்கு அரசு ஏதேனும் ஒரு வகையில் உதவ முன்வர வேண்டும் என்கிற கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

இதையும் படிங்க...'யாசகம் கேட்பது கூச்சமாக இருக்கிறது, வேலை கொடுத்தால் இனி வீதிக்குச் செல்லமாட்டோம்' - ஆதரவற்றவர்களுக்கு முகாமில் ஏற்பட்ட மனமாற்றம்

Last Updated : Jun 16, 2020, 7:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details