தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதார தூதுவர்களாக களமிறங்கிய மாணவர்கள்- சென்னை மாநகராட்சி அதிரடி - சுகாதார தூதுவர்களாக மாணவர்கள் நியமனம்

சென்னை: தொற்று நோய் தடுப்புக் குறித்த விழிப்புணர்வில் சுகாதார தூதுவர்களாக அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள். அதுபற்றிய ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு...

chennai students

By

Published : Nov 17, 2019, 2:28 AM IST

பொதுவாகவே குழந்தைகளும், சிறுவர்களும் எந்தவொரு செயலைச் செய்யும்போதும் அதில், நேர்த்தியைவிட கவனத்தை ஈர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பசிக்காக குழந்தை அழுவதில் தொடங்கும் இந்தவித கவனஈர்ப்பு யுத்திகளை, அப்பருவத்தை கடந்த நாம் மறந்துபோயிருந்தாலும், சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதனை மறந்திருக்கவில்லை.

சுகாதார தூதுவர்களாக அசத்தும் மாணவர்கள்

எனவேதான், தொற்று நோய்த் தடுப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் செய்தால், மக்களிடம் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பொதுமக்கள், தங்களின் வீடுகளையும், தெருக்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டால் டெங்கு மற்றும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளை சுகாதார தூதுவர்களாக நியமித்து, அவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

’சுத்தமான சென்னை - சுகாதாரமான சென்னை’ என்ற விழிப்புணர்வு பரப்புரையை சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவர்களை சுகாதாரத் தூதுவர்களாக முன்னிறுத்தும் பன்முக ஊடகப் பரப்புரை சென்னை மாநகர பகுதிகளில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை என்ற விகிதத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் 20 ஆயிரம் பள்ளி மாணவர்கள் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம், காய்ச்சல் தடுப்பு, தொற்று நோய் ஒழிப்பு மற்றும் குடியிருப்புகள், பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

முதலில் தங்கள் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள அவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தும் இந்த மாணவத் தூதுவர்கள், அதனைத்தொடர்ந்து, தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நோய்த் தொற்றுகளிலிருந்து காத்துக்கொள்ளவும், பொதுமக்களிடம் தங்கள் ஆசிரியையின் உதவியுடன் இந்த விழிப்புணர்வை பள்ளி நாட்களுக்கு பாதிப்பின்றி செயல்படுத்தி வருகின்றனர்.

சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம், பள்ளி மாணவர்கள் மூலம் தொடங்கியுள்ள இந்த விழிப்புணர்வு பரப்புரை, பொதுமக்களுக்கு சுகாதாரத்தை எப்படிப் பேண வேண்டும் என்கிற பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என்பதை முழுமையாக நம்பலாம்.

ABOUT THE AUTHOR

...view details