இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாக 1851ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை அருங்காட்சியகம் திகழ்கிறது. கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. அருங்காட்சியகம் ஒரு புதையல் ஆகும் ! கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் இன்னும் பலவற்றின் மிகச்சிறந்த தலைசிறந்த களஞ்சியமான சென்னை அருங்காட்சியகம் அனைவரையும் கவரும் விதமாக திகழ்கிறது.
தெற்கு ஆசியாவின் 16.25 ஏக்கர் நிலப்பகுதி முழுவதும் பரவி, மிகப்பெரிய அரசாங்க அருங்காட்சியகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் வளாகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட ஆறு கட்டடங்கள் உள்ளன. தலைமைக் கட்டடத்தின் கீழ்தளத்தில் சிற்பங்கள், இந்து சிற்பங்கள், அமராவதி, சமணம், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், பொது நிலவியல் போன்றவற்றுக்கான 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் முன் கட்டடத்தில், கடந்த காலத்திலிருந்த கலைப்பொருட்கள், சிற்பங்களைக் காணலாம், கால்நடை காலணிகள், தாவரவியல் காட்சியகங்கள், பட தொகுப்புகள் போன்றவைகளை காணலாம். முன்னணி கட்டடத்தில் சுவாரஸ்யமான கைப்பாடம் தொகுப்பு மற்றும் காட்சியகங்கள், நாட்டுப்புற கலை மற்றும் இசை பாதுகாக்கும் காட்சியகங்கள் உள்ளது. மேலும் வெண்கல தொகுப்பு – வெண்கல கலைக்கூடங்களை தவிர்த்து, நாணயவியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு காட்சியகங்கள் உள்ளன.
அதேபோல் குழந்தைகளின் காட்சி கூடத்தில், குழந்தைகள் பிரிவு, தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கலைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தேசிய கலைக்கூடத்தில் சிறப்பான ஓவியங்கள், கலை சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கலை எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
அர்ச்சனாரீஸ்வரர் வெண்கல சிவன், சிவன் சிலை, 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித நூல்கள், அமராவதி பௌத்த தளமும், வரலாற்று தென் இந்தியாவும் சென்னையில் அரசு அருங்காட்சியகத்தின் மிக விலையுயர்ந்த தொகுப்புகள் ஆகும். அரசாங்க அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். தற்போது இங்கிருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் அருங்காட்சியத்திலுள்ள புத்தகங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வருங்காலத்தில் இந்த பதிவேடுகளைப் பாதுகாப்பது சிரமம் என்றும், ஒரு பொருளை பற்றிய விவரங்களைத் தேடி எடுப்பதிலும் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காலமாற்றம் காரணமாக, தற்போது பொருட்களின் வரலாற்றை புகைப்படத்துடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருங்காட்சியத்தின் ஆணையர் சண்முகம், இந்திய அளவில் சென்னை அருங்காட்சியம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்திற்கு தலைமை அருங்காட்சியமாக இது திகழ்கிறது. மேலும் தற்போது உள்ள மின்னணு தொழில்நுட்பம் காரணமாக, இந்த அருங்காட்சியத்தில் மின்னணு சார்ந்த தொடுதிரை, முப்பரிமாண தோற்ற அமைப்பு, செயலி உள்ளிட்டவை இதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம். தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத நேரத்தில் மாணவர்கள், பொதுமக்கள், அதிகளவில் வருகின்றனர் என தெரிவித்தார்.
பார்வையாளர் அசிப் அஹமது நம்மிடம் பேசியபோது, மற்ற மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்தை காட்டிலும், இந்த அருங்காட்சியகம் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு அனைத்தும் சிறப்பாக உள்ளது. மேலும் இங்கு ஆதிகாலம் முதல் தற்போது வரை அனைத்து துறை சார்ந்தும் கற்றுக்கொள்ள முடிகிறது. குறிப்பாக பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவற்றை காணும்போது மிகவும் வியப்பாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் டைனோசர் போன்ற எலும்புக்கூடு பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது. தற்போது கரோனா சூழ்நிலையில் எட்டு மாத இடைவெளியில் புத்துணர்ச்சியுடன் இந்த அருங்காட்சியகத்தை ரசித்தோம் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதமாக பொதுமக்கள் வெளியே வராத சூழ்நிலையில் தற்போது பொதுமக்கள் குறைந்த விலையில் அருங்காட்சியகத்தை பார்க்க வசதியாக உள்ளது. மேலும் இங்கு பதிவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும், பள்ளி குழந்தைகளுக்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க முழு நாளும் செலவு செய்யலாம்.
வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும், வெளிநாட்டு குழந்தைகளுக்கு 150 ரூபாயும், வெளிநாட்டு பள்ளி குழந்தைகளுக்கு 75 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. தற்போது விஞ்ஞானம் வளர்ந்து வருகிற நேரத்தில் அருங்காட்சியகம் தகவமைத்து அதற்கேற்ப செயலி மூலம் செல்போனில் அருங்காட்சியகத்தை நேரில் காணும் வசதி தற்போது உருவாகி கொண்டு வருகிறது. இங்கு பொழுதைக் கழிக்க ஒன்றுமில்லை, பொழுதைக் பயனுள்ளதாக மாற்றி கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கின்றது.
இதையும் படிங்க: கரோனா குறித்து பாடல் பாடி அசத்தும் அரசு அலுவலர்